ஜோகூர் பாரு, பிப்ரவரி.08-
ஜோகூர் பாரு, கம்போங் மெலாயு மஜிடி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், சிறுவன் ஒருவன் சக சிறுவர்களால் துன்புறுத்தப்படும் 23 விநாடிகள் கொண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.39 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடந்த சிறுவன் மீது மற்ற சிறுவர்கள் கொடூரமாக நடந்து கொள்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களில், மூவர் பாதிக்கப்பட்ட சிறுவனைத் தூக்கிச் செல்வதும், மற்றொருவர் கண்காணிப்பில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைக் கண்ட பொதுமக்கள், இது ஒரு தீவிரமான குற்றச்செயல் என்றும், சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் துறை தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்தின் துல்லியமான விபரங்களைக் கண்டறியவும், இதில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் அடையாளம் காணவும் போலீஸ் தரப்பில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.








