கோலாலம்பூர், அக்டோபர்.26-
மலேசியாவில் Influenza-Like Illnesses எனப்படும் இன்ஃபுளுவென்ஸா போன்ற நோய்களுக்கான ஆலோசனை விகிதம் கடந்த வாரத்தில் 10.56 விழுக்காடாக உயர்ந்துள்ள போதிலும், நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்ஃபுளுவென்ஸா அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், உடனடியாகச் சுகாதார மையங்களில் சிகிச்சை பெறுமாறும் துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கேட்டுக் கொண்டார்.
அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் போதிய நடைமுறைகள் சுகாதார அமைச்சிடம் இருப்பதாகவும், இது தொடர்பாகச் சுகாதார வசதிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இன்ஃபுளுவென்ஸாவால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்கள் குறித்து மாநில அளவில் மரண மறுஆய்வுக் குழுக்கள் ஆய்வு செய்வதாகவும், பெரும்பாலும் இவை பிற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களையே பாதிக்கின்றன என்றும் அவர் விளக்கினார்.








