முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்துகளை அறிவிக்குமாறு எந்த நோட்டிஸும் வழங்கப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறுகையில், சொத்து அறிவிப்பு நோட்டிஸ் வழங்குவதற்கு சட்டத்தில் குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், 12 வயது சிறுவன் தொடர்பில் நியாயமான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சரவணன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முன்னதாக சொத்து அறிவிப்பு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டதாகவும், வெளிநாட்டில் இருந்த சில குடும்ப உறுப்பினர்கள் நேரில் வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு சரவணனுடன் அவரது 12 வயது மகனும் வந்திருந்தாலும், சிறுவனுக்கு நோட்டிஸ் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்படவில்லை என்றும் அப்துல் ஹலிம் தெளிவுபடுத்தினார்.
பெற்றோருடன் துணையாக மட்டுமே அந்த 12 வயது சிறுவன் வந்திருந்ததாகவும், அவருக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்றும், அவருக்கு நோட்டீஸ் வழங்குவதில்லை என்று எஸ்பிஆர்எம் தனது விவேகத்தை பயன்படுத்தி இந்த முடிவை எடுத்ததாகவும் அப்துல் ஹலிம் விளக்கினார்.
இன்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர்எம் தலைமையகத்தின் 59 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பதை அப்துல் ஹலிம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தி, சரவணனின் 12 வயது மகனை எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரவழைத்தது அதிகார துஷ்பிரயோகம் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் சரவணன் மீதான எஸ்பிஆர்எம் விசாரணையின் ஒரு பகுதியாக, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொத்து அறிவிப்பு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.








