
தெலுக் இந்தான்,ஜுலை 19-
தனது மனைவியை அடித்து காயப்படுத்தப் போவதாக மிரட்டி வந்த ஆடவர் ஒருவருக்கு தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதித்தது.
சொந்த தொழில் புரிந்து வரும் 49 வயது P. குமார் என்ற அந்த ஆடவர், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தத் தவறுவாரேயானால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
P. குமார் கடந்த ஜுலை 18 ஆம் தேதி பிற்பகல் 2.40 மணியளவில் பேரா, பாகன் டத்தோ மாவட்டத்திற்கு உட்பட்ட பரிட் 26 பத்து ஹுதான் மெலிந்தாங் என்ற இடத்தில் ஒரு வீட்டின் வேலியோரமாக தனது 43 வயது மனைவி R.S. கனகத்திற்கு இந்த மிரட்டலை விடுத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான P. குமார் குற்றஞ்சாட்டப்பட்டார்.







