புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்.30-
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிறை டோல் சாவடியில், ஆடவர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதி, கஞ்சா வகை போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
அத்தம்பதிக்கு எதிராக 31 வயது ஆடவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவர்களை கைது செய்ததாக மத்திய செபராங் பிறை போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட ஆடவரும், அவரது மனைவியும் பினாங்கை நோக்கிப் பயணித்துள்ளனர்.
பிறை டோல் சாவடியில், தடுப்பானது திறக்கவில்லை என்பதால், அந்த ஆடவர் தனது காரிலிருந்து இறங்கி பின்னால் உள்ள காரை, பின்னோக்கி நகர்த்துமாறு கேட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், புரோட்டோன் X50 காரில் இருந்த தம்பதி, அந்த ஆடவரை நோக்கி வேகமாக காரை செலுத்தி மோதித் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றதாக ஹெல்மி அரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அத்தம்பதி கைது செய்யப்பட்டு இன்று புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்நிலையில், அந்த ஆடவரை வரும் ஜனவரி 3-ஆம் தேதி வரையில், தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.








