ஷா ஆலாம், அக்டோபர்.02-
சிலாங்கூரில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் போதைப்பொருள் கடத்திய நான்கு கும்பல்களைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிலாங்கூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 84 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல்வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
முதல் சோதனை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 2ஆவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளரான 42 வயது நபர் கைது செய்யப்பட்டது மூலம் 12.3 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அடுத்தடுத்த கைது நடவடிக்கையும் போதைப்பொருள் கைப்பற்றலும் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.








