Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தெக்குன் உதவித்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : டத்தோ அன்புமணி கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெக்குன் உதவித்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : டத்தோ அன்புமணி கோரிக்கை

கோலாலம்பூர், டிச. 7-


வணிகத்தில் ஈடுபடுகின்றவர்கள் புதியவர்களா? பழையவர்களா? என்பது முக்கியம் அல்ல. தாங்கள் சார்ந்துள்ள தொழிலில் கொண்டுள்ள பொறுப்பும் நம்பிக்கையும்தான் முக்கியம். அதுதான் அவர்களுக்கு வெற்றியைத் தேடி வரும் என்று தொழில் முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனின் அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார்.

சிறு மற்றும் குறு அளவில் வியாபாரம் செய்து வரும் நமது இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இளையோர்கள், தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்திக்கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், தமது தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் மூலம் தெக்குன் திட்டத்தின் வாயிலாக இந்திய இளைஞர்களுக்கு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களை நமது இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டத்தோ அன்புமணி கேட்டுக்கொண்டார்.

நேற்று கோலாலம்பூர், ஜாலான் நாக்கேடா யூசோப்பில் ஒரே கூரையின் கீழ் 25 க்கும் அதிகமான ஸ்டால் உணவகங்களைக்கொண்ட மிகப்பெரிய இந்தியன் பூட் கோர்ட் என வர்ணிக்கப்படும் விருந்து உணவகத்தளத்தை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் சார்பாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில் டத்தோ அன்புமணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியர்களின் மிகப்பெரிய வர்த்தகத் தளமாக விளங்கும் விருந்து உணவகத்திட்டத்தை முன்னெடுத்த அதன் ஆலோசகர் ஜெகன் பொன்னுசாமி மற்றும் அவரின் குழுவினருக்கு டத்தோ அன்புமணி தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

மலேசியாவிலேயே இது போன்ற கட்டமைப்பைக்கொண்ட ஓர் உணவகம் நமது இந்திய சிறு வணிகர்களால் குறிப்பாக இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றால் பெருமைக்குரிய விஷயமாகும். அவர்களுக்கு பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் கொள்கையாக இருந்து வருகிறது என்று அன்புமணி பாலன் குறிப்பிட்டார்.

புதியதாக திறக்கப்பட்டுள்ள இந்த விருந்து உணவகத் தளத்தில் வணிகத்தில் ஈடுப்பட்டுள்ள 25 க்கும் மேற்பட்ட இந்திய வணிகர்கள், தெக்குன் வாயிலாக உதவித்திட்டங்களில் பங்கேற்று, பலன் அடையும் வகையில் தெக்குன் விளக்கமளிப்பு மற்றும் வணிகர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கையும் இந்நிகழ்வில் டத்தோ அன்புமணி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →