மலேசிய நாடாளுமன்ற விவாதங்களின் போது இனம், மதம் மற்றும் மாமன்னர் தொடர்பான 3R உணர்ச்சிகரமான விவகாரங்களைத் தொடுவதைத் தவிர்க்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களைத் தேசிய ஒற்றுமை அமைச்சு தயாரித்து வருகிறது.
இது குறித்து இன்று மக்களவையில் பேசிய துணயமைச்சர் ஆர். யுனேஸ்வரன், இந்த வழிகாட்டுதல் அறிக்கை விரைவில் சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துலிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவையில் சிறப்புரிமை இருந்தாலும், பொதுமக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்க அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.
மேலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த 'தேசிய நல்லிணக்க ஆணையம்' மற்றும் 'நல்லிணக்கச் சட்டம்' ஆகியவற்றை உருவாக்குவது குறித்த ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் அமைச்சு அளவில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








