கோலாலம்பூர், செந்தூல் யு.டி.சி. மையத்தின் எதிரே உள்ள அங்காடிகள் மற்றும் சிறு வணிகர்களின் கடைகள் இடிக்கப்படுவது, அவர்களை வெளியேற்றுவதற்காக அல்ல, மாறாக 1.6 மில்லியன் ரிங்கிட் செலவில் நவீன வசதிகளுடன் அப்பகுதியை மேம்படுத்துவதற்காகவே என்று கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று செந்தூல் யு.டி.சி. மையத்திற்கு நேரடி வருகை தந்து, லெஸ்தாரி நியாகா @ கோலாலம்பூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் கடைகள் இடிப்பு வீடியோ குறித்துப் பேசிய அவர், அங்குள்ள வணிகர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் மற்றும் முழுமையான நிதியுதவிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய கடைகள் கட்டி முடிக்கப்படும் வரையிலான 3 மாத காலத்திற்கு அதாவது அக்டோபர் மாதம் வரை அங்கு தீவிரமாக வியாபாரம் செய்து வந்த 20 வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தலா 1,500 ரிங்கிட் மாதாந்திர சிறப்பு நிதியுதவியை கோலாலம்பூர் மாநகர் மன்றமான டி.பி.கே.எல். வழங்கவுள்ளது என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் முழுவதும் உள்ள 287 சிறு வியாபாரத் தளங்களை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கு மொத்தம் 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயனடைவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஹன்னா இயோ வருகையின் போது Batu எம்.பி. P. பிரபாகரனும், கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ஃபட்லூன் மாக் உஜுட்டும் உடன் இருந்தனர்.











