கோலாலம்பூர் செந்தூலில் 3 இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்த கொலையில் மொத்தம் 4 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப் பட்ட போதிலும் ஒருவர், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னதாகவே ஜிஞ்சாங் போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
நேற்று காலையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மூவர் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டனர். இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்று நம்பப்படும் அந்த மூன்று பேரும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.சுமுடு சஜீவானி விதனேஜ் ப்ரதீப் சகாரா கொரலேஜ் மற்றும் பத்தும் சம்பத் விடானா பத்திரானா ஆகிய மூவரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்த மூவரும் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 11 மணியளவில் செந்தூல், ஜாலான் கோவில் ஹீலிர் , ஜாலான் பெர்ஹெந்தியான் கடைவீடு கட்டட வரிசையில் உள்ள ஐந்து அறைகளை கொண்ட ஒரு வீட்டில் இலங்கைப்பிரஜைகளான 20 வயதுடைய இரு நபர்களையும் 30 வயதுடைய ஒரு நபரையும் தலையில் பிளாஷ்டிக் பையினால் கட்டப்பட்டு, மூச்சடைக்க வைத்து, கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்களில் சுமுடு சஜீவானி விதனேஜ் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டப்பட்ட மூன்று நபர்களில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த இரு நபர்களும் அடங்குவர்.நீதிமன்றத்தில் மூவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு வரும் நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







