தமிழ் ஊடகவியலாளர்களுடனான நல்லுறவைப் பேணுவதோடு, அவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் நோக்கிலும், ஜசெக தலைமையகம் 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி நல்லெண்ண விருந்தை நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜெம் (JEM) உணவகத்தில் வெகு சிறப்பாக நடத்தியது.

ஜசெக தலைமைச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடர்புத்துறை துணை அமைச்சரும் ஜசெகவின் மகளிர் பிரிவுத் தலைவருமான தியோ நீ சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவும் தொழில்முறை ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்திய அந்தோணி லோக், ஜனநாயகத்தில் ஊடகங்கள் ஆற்றும் பங்கு இன்றியமையாதது என்றார். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதும் விமர்சனங்களை முன்வைப்பதும் திறந்த சமூகத்தின் இயல்பான அம்சங்கள் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜசெகவின் மகளிர் பிரிவுத் தலைவியும் தொடர்புத்துறை துணை அமைச்சருமான தியோ நீ சிங் உரையாற்றுகையில், திட்டமிட்டபடி ஊடகங்களுக்கான புத்தாக்க நிதியின் இரண்டாம் கட்டமாக 30 மில்லியன் ரிங்கிட் விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிதிக்கான விண்ணப்ப நடைமுறை வரும் வெள்ளிக்கிழமை தொடங்கப்படக்கூடும் என்றும், இதனைத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தொடக்கி வைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். விண்ணப்பங்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தேதிகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், நிதி ஒதுக்கீடும் அதற்கான விதிமுறைகளும் தயாராக இருப்பதாக தியோ நீ சிங் கூறினார்.
இந்த நிதி குறிப்பாகத் தமிழ் ஊடகங்களையும் சென்றடைய வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், தகுதி வாய்ந்த ஊடக நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தீபாவளி நல்லெண்ண விருந்து நிகழ்வில், ஜசெக தலைமையகம் சார்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யியோ பீ யின், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.








