குவாந்தான், பிப்ரவரி.20-
பத்தாண்டுகளுக்கு முன்பு பினாங்கு, அரச மலேசிய விமானப்படைத் தளத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் தன் கணவரை இழந்த எஸ். உஷா, தற்போது மீண்டும் ஒரு சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி உஷாவின் கணவர் மேஜர் சி. காயம்பு, பயணம் செய்த Beechcraft B200T வகை விமானம், பட்டர்வொர்த் விமானத் தளத்திற்குள் விழுந்து நொறுங்கியதில் அவர் உயிரிழந்தார்.
சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தையின் அடியொற்றி ராணுவத்தில் சேர்ந்து, உயர் பதவிகளைப் பெற்று ராணுவ விமானப் பிரிவில் சேவை செய்ய விரும்பிய 22 வயது மகன் இந்திரனுக்கும் அதே போன்ற ஒரு விதி நேர்ந்துள்ளது.
நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவரான இந்திரன், குவந்தான் 10-ஆவது மைல் முகாமில் 'கிளாஸ் 1 ஆர்மர் குரூ' (Class 1 Armour Crew) பயிற்சியில் இருந்த போது நேற்று எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த இழப்பு அந்தக் குடும்பத்தின் பழைய ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளது.
தனது துயரத்தை அடக்கிக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய உஷா, தந்தை இறந்த போது 12 வயதாக இருந்த இந்திரன், தனது தந்தையைப் போலவே வர வேண்டும் என்ற கனவை நிறைவேற்றவே ராணுவத்தில் சேர்ந்ததாகக் கூறினார்.
"அவர் ராணுவத்தில் இருந்த போதிலும், உயர் பதவிகளுக்குச் செல்ல மேற்கொண்டு படிக்கத் திட்டமிட்டிருந்தார். அவரது தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்க அவரது தந்தையே எப்போதும் ஊக்கமாக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக இது நடந்து விட்டது, என் மகன் இனி இல்லை என்பதை என்னால் ஏற்கச் சற்று காலமாகும். இந்த மாதத் தொடக்கத்தில் பேராக் மாநிலத்தில் நடந்த பயிற்சித் திட்டத்தின் போதுதான் நாங்கள் இந்திரனைக் கடைசியாகச் சந்தித்தோம்," என்று அவர் கூறினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு போர்ட்டிக்சனில் உள்ள ராணுவ அடிப்படைப் பயிற்சி மையத்தில் தனது பயிற்சியை இந்திரன் முடித்தார். தொடக்கத்தில் அவர் விமானப்படையில்தான் சேர விரும்பினார், ஆனால் அதற்கான தகுதிகள் பூர்த்தியாகாததால் ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் அங்கு உயர்கல்வி கற்று ராணுவ விமானப் பிரிவில் சேர அவர் ஆசைப்பட்டார்.
இந்திரனின் தந்தை காயம்பு, 2016 டிசம்பர் 21 அன்று தனது 44-ஆவது பிறந்தநாளிலேயே விமான விபத்தில் உயிரிழந்தார். அந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில், தனது மகனின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று உஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.








