ஷா ஆலாம், அக்டோபர்.04-
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் ராஜா மூடாவின் அரசத் திருமண ஊர்வலத்தைக் கண்டு களிக்கவும், உற்சாகப்படுத்தவும் நேரம் ஒதுக்கி வருகை தந்த அனைத்து மக்களுக்கும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அக்டோபர் 2 ஆம் தேதி கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷாவில் உள்ள அரச பள்ளிவாசலில் நடைபெற்ற அரச திருமண விழாவில் ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமீர் ஷா, டத்தின் படுகா ஶ்ரீ அஃப்ஸா ஃபாடினி அப்துல் அஸிஸைக் கரம் பிடித்தார்.
பல்வேறு இனங்கள் மற்றும் மக்கள் முதன்முறையாக இதுபோன்ற ஒரு திருமண வைபவத்தைக் காண வந்திருப்பது, தம்மையும், தமது புதல்வரையும் மிகுந்த உற்சாகப்படுத்தியதுடன், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக சிலாங்கூர் அரச முக நூல் பதிவில் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா குறிப்பிட்டுள்ளார்.








