ஷா ஆலாம், நவம்பர்.02-
மலேசியாவில் வேலை செய்வதற்காகக் கடந்த 2023 ஆம் ஆண்டு தருவிக்கப்பட்ட 93 அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை எதுவும் கொடுக்காமல், அவதிக்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கு மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டு இருக்கும் தொழில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது.
மலேசியாவிற்கு வேலை செய்வதற்காகத் தருவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கு வேலை எதுவும் கொடுக்காமல் அவர்களைத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் ரிசர்வ் தொழிலாளர்களாகக் கருத முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி நற்குணவதி சுந்தரேசன் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் ரிசர்வ் தொழிலாளர்கள் என்ற கண்ணோட்டம் தவறானதாகும் என்று நீதிபதி நற்குணவதி குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் 93 தொழிலாளர்களில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் 2 ஆயிரம் ரிங்கிட் முதல் 11 ரிங்கிட் வரை இழப்பீடு வழங்கப்படுவதற்கு கடந்த ஆண்டு தொழில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்துவதாக நற்குணவதி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வந்த Aecor Innovation Sdn. Bhd. நிறுவனம், தங்களுக்கு எதிராக தொழில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, நீதிபதி நற்குணவதி மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.








