காஜாங், ஆகஸ்ட்.01-
காஜாங்கில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் சக வகுப்பறை மாணவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் கைது செயயப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் 12.57 மணியளவில், பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நான்கு மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் கடந்த ஜுலை 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மாணவனுடன் சக மாணவர்கள், அந்த பேரங்காடிக்கு இணைந்து சென்ற போது, இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்தது.
இரண்டு மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட, இதர இரண்டு மாணவர்கள் அந்தத் தாக்குதலைத் தங்களின் கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.35 மணியளவில் கைது செய்யப்பட்ட அந்த நான்கு மாணவர்களும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக நாஸ்ரோன் கூறினார்.








