Aug 25, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு / குற்றச்சாட்டுகளின் அடிப்படைத் தன்மையை நீதிபதிகள் அறிவிக்கத் தேவையில்லை
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு / குற்றச்சாட்டுகளின் அடிப்படைத் தன்மையை நீதிபதிகள் அறிவிக்கத் தேவையில்லை

Share:

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சம்பந்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரங்களின் படியா? அல்லது சட்டரீதியான அனுமானமா? என்பதை, அரசாங்கத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரிடம் தெரிவிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை, விசாரணை நீதிபதிகளுக்கு இல்லை என்று புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜூலசிரி அகில்மாரா என்பவர் மீதான கடத்தல் குற்றச்சாட்டுத் தீர்ப்பை, இன்று மீண்டும் உறுதி செய்த போது, நீதிபதிகள் நோர்டின் ஹாசன் மற்றும் அஸ்மி ஆரிஃபின் ஆகியோர் அடங்கிய பெரும்பான்மை அமர்வு இக்கருத்தை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த அமர்வின் தலைவரான நீதிபதி ரோட்சாரியா புஜாங் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜூலசிரி அகில்மாரா-வும், அஸ்பால் ஹுசாம் என்பவரும் 137.03 கிராம் மெத்தம்பெட்டமைன் கடத்தியதாக தவாவ் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அப்பீல் நீதிமன்றமானது, ஜூலசிரி அகில்மாரா மீதான கடத்தல் குற்றச்சாட்டை போதைப்பொருள் வைத்திருந்த குற்றமாகக் குறைத்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்நிலையில், இதனை எதிர்த்து அரசாங்க தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டை இன்று விசாரணை செய்த கூட்டரசு நீதிமன்றம் மீண்டும் கடத்தல் குற்றத்தை உறுதி செய்துள்ளது.

நீதிபதி அஸ்மி ஆரிஃபின் தலைமையிலான பெரும்பான்மை தீர்ப்பில், அரசாங்கத் தரப்பு முதற்கட்டமாக போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதா என்பதை மட்டுமே நீதிபதி தீர்மானிக்க வேண்டும் என்றும், கடத்தல் குற்றச்சாட்டின் சட்ட அடிப்படையை தனியாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் சட்டத்தில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பினையடுத்து, Julasiri-க்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News