சரவாக்கில் நிலவி வரும் புகைமூட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய புகைமூட்டம் முந்தைய காலங்களைப் போல் மோசமாக இல்லாவிட்டாலும், எல் நினோ வானிலை தாக்கத்தை கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நிலை தற்காலிகமாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தும் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் டத்தோ டக்ளஸ் உக்காஹ் தலைமையிலான சரவாக் பேரிடர் மேலாண்மை கமிட்டி ஒருங்கிணைக்கும் என்றும் அபாங் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று திங்கட்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி செரியான் பகுதியில் காற்றின் தரக் குறியீடான எ.பி.ஐ 182 ஆகப் பதிவாகி, ஆரோக்கியமற்ற நிலையில் அதிகபட்சமாக இருந்தது.
அதேவேளையில் சமரஹான்,கூச்சிங்,சிபு ,முக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் 150 முதல் 160-க்கும் மேல் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது








