சுங்கை பட்டாணி, செப்டம்பர்.22-
அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட 30 வயது இளைஞர் ஒருவர் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளானார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சுங்கை பட்டாணி, பாயா நாஹு அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பிளாக் A5 கட்டடத் தொகுதியில் நிகழ்ந்தது.
கடும் காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் தனது அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தனது அண்ணன் வீட்டில் இல்லை என்று அவரின் அண்ணி கூறியுள்ளார். தனது அண்ணன் வரும் வரை பிளாக் A5 கட்டடத் தொகுதியில் அந்த இளைஞர் காத்திருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் கூர்மையான ஆயுதத்துடன் அவ்விடத்திற்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவர், அந்த இளைஞரை சரமாரியாக ஆயுதத்தினால் தாக்கி காயம் விளைவித்துள்ளார் என்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.
கைகளிலும், கால்களிலும் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய சந்தேகப் பேர்வழி, காலை முதல் மதுபோதையில் இருந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த நபர் பின்னர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக ஏசிபி ஹன்யான் கூறினார்.








