பி 40 தரப்பைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்தியர்களின் பொருளாதார, சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ரா, 3 பிரத்தியேக உதவித் திட்டங்களை இன்று அறிவித்துள்ளது.
மித்ராவிடமிருந்து மானிய உதவித் தொகையைப் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில் சாமானிய மக்களின் பொருளாதார சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு மித்ரா சிறப்பு பணிக்குழுவித் தலைவர் டத்தோ ரா. ரமணன் இந்த 3 பிரத்தியேக உதவித் திட்டங்களை இன்று அறிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தை சேர்ந்த வசதி குறைந்த மக்களின் கல்வி, உயர்கல்வி, பொருளாதாரம், தொழில் பயிற்சி, நலன் சார்ந்த அம்சங்கள் மற்றும் அவர்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் முதல் கட்டமாக இந்த மூன்று பிரத்தியேக உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.
அரசாங்க பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு உதவும் திட்டத்தின் கீழ் B 40 தரப்பைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு ஒரு முறை வழங்கக்கூடிய உதவித் தொகையாக தலா 2 ஆயிரம் வெள்ளி நிதி உதவி வழங்கப்படும் என்று டத்தோ ரமணன் அறிவித்தார.
இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு வரும் திங்கட்கிழமை முதல் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். யார் முதலில் விண்ணப்பம் செய்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் . இதற்காக 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது உதவித் திட்டமானது, கல்வி அமைச்சின் பதிவு பெற்ற தனியார் தமிழ் பாலர் பள்ளிகளில் சேர்க்கப்படும் வசதி குறைந்த இந்திய சிறார்களுக்கு பாலர் பள்ளி கட்டணம், காலை சிற்றுண்டி உள்ளடக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மாதம் தோறும் தலா 200 வெள்ளி உதவித் தொகை 12 மாதங்களுக்கு வழங்கப்படும். இந்திய சிறார்கள் தொடக்க கல்வியை விடுப்பட்டு விடக்கூடாது என்பதற்காக 4,500 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கொடுக்கப்படும். இதற்காக ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார். இதற்கான விண்ணப்ப சமர்ப்பிப்பு, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி வரும் மே 16 ஆம் தேதி அமலில் இருக்கும்.
மூன்றாவது உதவித் திட்டமானது, சிறுநீரக கோளாறினால் Dialisis சிகிச்சை பெற்று வரும் B40 தரப்பைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு டைலிஸீஸ் சிகிச்சைக்கும் தலா 200 வெள்ளி உதவித்தொகை வீதம் மாதத்திற்கு நான்கு முறை அந்த உதவித் தொகை வழங்கப்படும். மெத்தம் 900 சிறுநீரக நோயாளிகளுக்கு ஓர் ஆண்டு காலம் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக 80 லட்சத்து 64 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் வரும் திங்கட்கிழமை தொடங்கி வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களை மித்ராவிடம் சமர்ப்பிக்கலாம் என்று டத்தோ ரமணன் தெரிவித்துள்ளார்.








