டி.எல்.பி எனப்படும் இரட்டை மொழி பாடத்திட்டம் தொடர்பில் நிலவு குழப்பங்கள் குறித்து அரசாங்கம் தெளிவான வழிகாட்டலை வெளியிட வேண்டும் என்று முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கேட்டுக்கொண்டார்.
டி.எல்.பி விவகாரத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் அறிவித்து இருந்தாலும் இந்த இரு மொழி பாடத்திட்டத்தில் மாநில கல்வி இலாகாவும், பள்ளி நிர்வாகமும் தெளிவான வழிகாட்டலை கொண்டிருக்காத காரணத்தினால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது என்று புத்ரா ஜெயா எம்.பி.யுமான ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
டி.எல்.பி விவகாரத்தில் அரசாங்கத்தன் நிலைப்பாடு என்ன, அதன் கொள்கை யாது என்பது குறித்து கல்வி அமைச்சு தெளிவான வழிகாட்டலை வெளியிட்டு, அதனை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும என்று அவர் வலியுறுத்தினார்.
ஒரு முன்னான் கல்வி அமைச்சர் என்ற முறையில் பெற்றோர்கள் பலர் தம்மை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருவதாக ராட்ஸி ஜிடின் குறிப்பிட்டார்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியிலும் போதிப்பதற்கு வகை செய்யும் இந்த டி.எல்.பி திட்டம், கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் தெளிவான வழிகாட்டல்கள் இல்லாததால் பெற்றோர்கள் பலர் குழம்பிய நிலையில் இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.








