கோலாலம்பூர், ஜனவரி.22-
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ கொள்முதல்களில் தலைவிரித்தாடியுள்ள ‘ஊழல் மற்றும் முறைகேடு’ கலாச்சாரத்திற்கு இனி இடமில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அவசர சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இத்தகைய இலாக்காக்களின் நிர்வாகத்திலும், மேற்பார்வையை வலுப்படுத்துவதிலும், அரசாங்கம் இனி அதிக கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இராணுவ கொள்முதல் தொடர்பான பிரச்சினை மலேசியாவிற்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல என்று குறிப்பிட்டுள்ள அன்வார், 'ஊழல் மற்றும் மோசடி' மிக தீவிரமாக நடைபெறும் துறைகளில் பாதுகாப்பு மற்றும் கொள்முதல் துறையும் ஒன்று என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் வழங்கிய உறுதிமொழியின் படி, நாம் வலுவான நிர்வாகம் மற்றும் உறுதியான மேலாண்மை நடைமுறைகளைத் தொடங்குவதாகவும், தேசிய பாதுகாப்புத் தொழில்துறை கொள்கையான DIPN-ஐ நேற்று அறிமுகப்படுத்திய அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, முக்கிய அரசியல் தலைவர்களிடம் மட்டுமே இருந்த கையூட்டு வழங்கும் பழக்கம், தற்போது அரசுப் பணியாளர்கள், ஆயுதப் படைகள் மற்றும் சுங்கம் மற்றும் குடிநுழைவுத் துறை உட்பட அமலாக்க முகமைகளுக்கும் பரவி வருவதை அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்காப்பு அமைச்சரின் தலைமையிலான DIPN திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அவசர சீர்திருத்தங்கள் மேற்பார்வையை வலுப்படுத்துவதோடு, அனைத்து கொள்முதல்களும் வெளிப்படையானதாகவும், பொறுப்பேற்கப்படக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்யும் என்றும் அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.








