ஜார்ஜ்டவுன், ஜனவரி.21-
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி, ஜாலான் பெசார் பெர்மாத்தாங் கெலிங் சாலையில் உள்ள கார் கழுவும் நிலையத்தைச் சேர்ந்த உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த இரு சந்தேக நபர்களும், பினாங்கு மாநிலத்தில் இருவேறு பகுதிகளில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியிலுள்ள காரணத்தைக் கண்டறிய, விசாரணைகள் நடைபெற்று வருவதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம், பிரிவு 302-இன் கீழ் நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அந்த இரு நபர்களும் வரும் ஜனவரி 24 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இக்கொலை சம்பவத்தின் போது, கார் கழுவும் நிலையத்தின் உரிமையாளரை நோக்கி, சந்தேக நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் அந்த நபரின் உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.








