கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து காணாமல் போன முதியவர் ஒருவர், சுமார் 7 மணி நேர தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அப்துல் அஷிஸ் முகமட் லாசிம் என்று அடையாளம் கூறப்பட்ட 72 வயதுடைய அந்த முதியவர், கெடா, பாலிங், சுங்கை கெத்தில், கம்போங் கோலா செனெராய் ஆற்றில் நேற்று மதியம் 12 மணியளவில் மிதக்க காணப்பட்டார்.
சிறிது பக்கவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டு நினைவாற்றல் குறைந்தவரான அந்த நபர், காலையில் வீட்டில் காணப்படவில்லை. அவரின் மகன், போலீசில் புகார் செய்ததத்தை தொடர்ந்து அந்த முதியவரை தேடும் பணியை போலீஸ் துறை முடுக்கிவிட்டது.
பொது தற்காப்புப்படையினர், தீயணைப்பு, மீட்புப்படையினர், போலீஸ் மோப்ப நாய் பிரிவினர் என 50 க்கும் மேற்பட்டவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த முதியவர் இடறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படும் வீட்டிற்கு அருகில் கடக்கும் ஆற்றிலிருந்து படகு மூலம் தேடும்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த முதியவரின் உடல் சம்பவ இடத்திலிருந்து 50 மீட்டர் தூரம் கண்டு பிடிக்கப்பட்டது.புலன் விசாரணைக்கு ஏதுவாக சடலம், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.








