கோலாலம்பூர், ஜனவரி.20-
சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடித் திட்டம் குறித்த புகார்களை விசாரிக்கும் வகையில், ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட நிர்வாகிகள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் இந்த ஒன்பது பேரும் தங்களது வாக்குமூலங்களை வழங்கினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி, "இரண்டு ஐஜேஎம் நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு குறித்து நாங்கள் முழுமையான விசாரணையை மேற்கொள்வோம்," என்று தெரிவித்தார்.
இது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பான விவகாரம் என்பதாலும், விசாரணை நேற்றுதான் தொடங்கப்பட்டது என்பதாலும், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க இயலாது. இது மிக ஆரம்பக் கட்டம். ஆவணங்களை ஆய்வு செய்ய கூடுதல் காலம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.








