நாட்டின் முன்னணி வழக்கறிஞரும், ஷரியா சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரான டத்தோ சுலாய்மான் அப்துல்லா காலமானார். அவருக்கு வயது 77. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வழக்கறிஞர் சுலைமான் அப்துல்லா,நேற்று மாலை காலமானார் என்று அவரின் புதல்வர் திரைப்பட இயக்குநருமான ஹுசிர் சுலைமான் சுலாய்மான் தெரிவித்தார்.
சுலைமான் அப்துல்லாவின் நல்லுடல் இன்று முற்பகல் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் டெம்ப்லர்,மஸ்ஜிட் ஜாமெக் சுல்தான் அப்துல் அசிஸ் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஹுசிர் சுலாய்மான் குறிப்பிட்டார்.
தமது தந்தை பல்வேறு நோய் உபாதைகளுக்கு ஆளாகிய போதிலும் அவரின் கூர்மையான சிந்தனை கடைசி வரை சட்டத்துறை தொடர்பாக சந்தேகம் கேட்டு வருகின்றவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதில் தீவிரம் காட்டினார் என்று ஹுசிர் சுலைமான் தெரிவித்தார்.
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான சுலைமான் அப்துல்லா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிரான ஓரினப்புணர்ச்சி வழக்கில் முன்னணி வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார். அதேவேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான SRC International லஞ்ச ஊழல் வழக்கில் பிராசிகியூஷன் தரப்புக்கு தலைமை வழக்கறிஞராக ஆஜராகியிருந்தார்.
2008 ஆம் ஆண்டு பேரா மாநிலத்தில் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட போது அன்றைய பேரா மந்திரி புசார் டத்தோ நிசார் ஜாமாலுடின் சார்பாக ஆஜராகி, பேரா மாநில அரசமைப்பு சட்டம் தொடர்பான வினாக்களை தொடுத்த முன்னணி வழக்கறிஞராகவும் சுலைமான் அப்துல்லா விளங்கினார்.
நாட்டின் தேசிய விமான நிறுவனமான Malayasia Airlines முதலாவது தலைவரும், மலேசிய கப்பல் போக்கு வரத்து நிறுவனமான Malaysia International Shipping Corporation, உதயமாவதற்கு முக்கிய காரணகத்தாவாக விளங்கியவமான Tan Sri G.K. Rama Iyer- ரின் ( டான்ஸ்ரீ ஜி.கே. ராம ஐயரின் ) சகோதரருமான சுலைமான் அப்துல்லா, தமது சட்டக்கல்வியை 1969 ஆண்டில் முடித்து, இஸ்லாமிய சட்டமான ஷரியாவிலும் நிபுணத்துவம் பெற்றார்.
சுலைமான் அப்துல்லாவின் இயற்பெயர் ஜி. ஸ்ரீனிவாசன் ஐயர் என்பதாகும். இவரின் தந்தை வி.கே. கணபதி, நாட்டின் முதலாவது தமிழ்ப்பள்ளி தோற்றம் கண்ட Penang Free School லில் ஆங்கில பள்ளியின் ஆசிரியர் ஆவார்.








