நீலாய், ஜனவரி.09-
நெகிரி செம்பிலான், நீலாய் வட்டாரத்தை உலுக்கிய நாட்டு வெடிக்குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, 63 வயது முதியவருக்கு எதிராக இன்று ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தற்போது சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த முதியவருக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகள், மருத்துவமனை வளாகத்தில் நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
மருத்துவமனைக் கட்டிலில் அந்த முதியவர் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து ஐந்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக வாசித்து முடிக்க கிட்டத்தட்ட 20 நிமிடம் ஆனது. அந்த முதியவர் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும் உடல் சீரான நிலையில் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வாசிக்கப்பட்டது.
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ஒருவரின் வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 435-ன் கீழ் ஒரு குற்றச்சாட்டும், காயத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 1958-ஆம் ஆண்டு வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டன.
எனினும் தனக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்களையும் அந்த முதியவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.








