கோலாலம்பூர், ஜனவரி.13-
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் Tan Sri Dato' Muhammad Hafizuddeain Jantan- னின் தடுப்புக் காவல் காலம் நாளை புதன்கிழமை முடிவடைகிறது. இவரின் தடுப்புக் காவலை மேலும் நீடிப்பது குறித்து விசாரணை அதிகாரிகளின் தேவை மற்றும் தற்போதைய விசாரணையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இராணுவக் கொள்முதல் தொடர்பான டெண்டர்களில் முறைகேடு மற்றும் ஊழல் செய்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில் முன்னாள் இராணுவ தளபதியும், அவரின் இரு மனைவிகளும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
சட்டப்படி அதிகபட்சமாக 14 நாட்கள் வரை தடுப்புக் காவல் கோர முடியும். தற்போது முதல் கட்டமாக வழங்கப்பட்ட 7 நாள் காலக்கெடு நாளை முடிவதால், கூடுதல் விசாரணை தேவைப்பட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் நீட்டிப்பு கோரப்படும் என அவர் விளக்கினார்.
இராணுவத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இந்த ஊழல் விவகாரம் மிகவும் தீவிரமானது மற்றும் பெரிய அளவிலானது என்று அவர் சுட்டிக் காட்டினார். இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க தற்காப்பு அமைச்சுடன் இணைந்து எஸ்பிஆர்எம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








