பெர்மாத்தாங் பாவோவில் தொடக்கப்பள்ளி ஒன்றின் முன்பாக சாலையைக் கடந்து சென்ற 8 மற்றும் 9 வயதுடைய இரு பள்ளி மாணவிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த மோட்டார் சைக்கிளோட்டியைத் தேடி வருகின்றனர்.
நேற்று காலை சுமார் 7.20 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அமினுடின் ராஜா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான சுமார் 30 விநாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
சம்பவத்தின் போது, அந்த இரு மாணவிகளும் பாதசாரிகள் கடக்கும் பாதையில் சாலையைக் கடக்கும் போது, மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்தனர். தற்போது அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நிக் அமினுடின் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 43(1)-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








