மூன்று பள்ளி மாணவிகளின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 16 ஆயிரம் ரிங்கிட் அபராதம் போதுமானதல்ல என இரு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
14, 15 மற்றும் 16 வயதுடைய அந்த மாணவிகள் ஆசிரியரின் பொறுப்பில் இருந்த போது, அவர் தனது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் தவறாக பயன்படுத்தியிருப்பது தண்டனையில் முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என வழக்கறிஞர் எஸ். என். நாயர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்க சட்டம் அனுமதிப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, வழக்கறிஞர் வி. கோகில வாணி கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் தளர்வானது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் தண்டனை அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் அஷ்ரஃப் அகமது
, மூன்று பள்ளி மாணவிகளின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 16 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.








