பினாங்கு, ஆயர் ஈத்தாம் பகுதியில் சீனப் பள்ளி ஒன்றின் வெளியே, ஒரு கும்பலின் உறுப்பினர்கள் என தவறாக நினைத்து இருவர் மீது வெட்டுத் தாக்குதல் நடத்தியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட இருவருக்கும் தொடர்பில்லாத கடன் விவகாரத்தில் இருந்து உருவானதாக பினாங்கு போலீஸ் தலைவர் டென்னிஸ் லிம் தெரிவித்தார்.
கடன் வசூலிக்கச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள், கடன் விவகாரத்துடன் தொடர்புடைய கும்பலில் இந்த இருவரும் இருப்பதாகத் தவறாக நினைத்துள்ளனர்.
உண்மையில், இருவரும் சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள். அவர்கள் அணிந்திருந்த நீல நிற ஆடை, அந்தக் கும்பல் அணியும் உடையைப் போன்றிருந்ததால் தவறான அடையாளம் ஏற்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.
இதையடுத்து இருவரும் சரமாரியாக வெட்டப்பட்டதில் படுகாயமடைந்தனர். தற்போது அவர்களின் நிலை சீராக உள்ளது.
16 முதல் 33 வயதுக்குட்பட்ட 13 சந்தேக நபர்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஐந்து சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் பதின்ம வயதினர். சிலர் குண்டர் கும்பல் 04 ஐ சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.








