Sep 1, 2026
Thisaigal NewsYouTube
மெர்டேகாவை முன்னிட்டு மெகா டிரக் அணிவகுப்பு! — “FIRST MERDEKA CONVOY TRUCK MALAYSIA” சாதனையில்  SLM GROUP நிறுவனம்
தற்போதைய செய்திகள்

மெர்டேகாவை முன்னிட்டு மெகா டிரக் அணிவகுப்பு! — “FIRST MERDEKA CONVOY TRUCK MALAYSIA” சாதனையில் SLM GROUP நிறுவனம்

Share:

மலேசியாவின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு தங்களது நன்றியையும் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் SLM Group Sdn Bhd நிறுவனம், “First Merdeka Convoy Truck Malaysia” என்ற பெயரில் பிரம்மாண்ட லாஜிஸ்டிக் டிரைய்லர் லோரிகளைப் பயன்படுத்தி, ஊர்வலம் நடத்திய முதல் நிறுவனம் பெருமையை பெறுவதுடன் மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், புக்கிட் காயு ஹீத்தாம் எல்லைப் பகுதியிலிருந்து நேற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி பின்னிரவு 12.01 மணிக்கு தொடங்கி வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர் பாரு, ஸ்கூடாய் டோல் வரை 10 டிரைய்லர் லோரிகளை 10 ஓட்டுநர்கள் ஒரே அணிவகுப்பாக இணைத்து, சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் 12 மணி நேரப் பயணமாக இந்தச் சாதனை ஏற்படுத்தப்பட்டது.

நேற்று மாலை 6 மணியளவில் ஜோகூர் பாரு, ஸ்கூடாய் டோல் சாவடியில் இந்த சாதனைப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக SLM Group செயல்பாட்டு மேலாளர் ஜேசன் ஜேம்ஸ் தெரிவித்தார்.

பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக புக்கிட் காயூ ஹித்தாம் எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேசன் ஜேம்ஸ், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, தேவையான ஓய்வு, இடைநிறுத்தம் மற்றும் பிரார்த்தனை உள்ளிட்டவற்றுடன் ஓட்டுநர்கள் மற்றும் குழுவினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக ஜேசன் விவரித்தார்.

சிலாங்கூர், பூச்சோங்கை தளமாகக் கொண்ட SLM Group, லாஜிஸ்டிக் மற்றும் லைன் ஹால் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருவதுடன், Shopee, J&T Express உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் சேவை வழங்கி வருகிறது என அதன் தலைமை இயக்குநர் துரைராஜு அந்தோணி தெரிவித்தார். வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மாதத்திற்கு 2,000-க்கும் மேற்பட்ட டிரிப்களை மேற்கொள்ளும் இந்நிறுவனத்திடம் 30-க்கும் மேற்பட்ட டிரைய்லர் லோரிகள் உள்ளன.

லாஜிஸ்டிக் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்குவதை எடுத்துக்காட்டும் வகையிலும், மெர்டேகாவை முன்னிட்டு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையிலும் SLM Group இந்த முதல் முயற்சியில் ஈடுபட்டதாக துரைராஜு அந்தோணி விளக்கினார்.

ஊர்வலத்தின்போது பொதுமக்களும் லோரிகளுக்கு வழிவிட்டு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய அதேவேளையில் எதிர்காலத்தில் இதுபோன்ற CONVOY நிகழ்வுகளில் மேலும் அதிகமான லோரிகளை ஈடுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனைடைய இதன் நிறைவு விழா, நேற்று இரவு ஜோகூர் செனாயில் Impian ஹோட்டலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் P. பன்னீர் செல்வம் கலந்து சிறப்பித்தார்.

நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் அதேவேளையில் தாங்கள் சார்ந்த SLM Group நிறுவனத்தின் மூலமாக இளையோர்கள் இது போன்ற புதுமையான நிகழ்வில் ஈடுபட்டு சாதனையை ஏற்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும் என்றார்.

இதனிடையே மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு இத்தகைய மகத்தான சாதனையைப் படைத்த SLM Group நிறுவனம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக அதன் அதிகாரி முகம்மத் நஸ்ருல் ஹஃபிஸி அஹ்மத் ஃபெளசி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன் நிறுவனத்தின் பொறுப்பாளர்களிடம் நற்சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் SLM Group நிறுவனம், லோரி ஓட்டுநர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கான லோரிகளின் பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Related News