பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.20-
புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க விழாவில் நேற்று, மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆற்றிய அரச உரையை, தவறாக மொழிபெயர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சைனா பிரஸ் நாளிதழை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி விசாரணை செய்து வருகின்றது.
மலாய் மொழியைப் புரிந்து கொள்ளாத் மலேசியர்கள் மலேசியாவில் வசிக்கக்கூடாது என்று மாமன்னர் கூறியதாக மாண்டரின் மொழியில் செய்தி வெளியிட்டிருந்த சைனா பிரஸ், பின்னர் அதனை அகற்றியது.
அதன் பின்னர், மீண்டும், மலாய் மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாத மலேசியர்கள் வேறு எங்காவது வசிப்பதே சிறந்தது என்று மாமன்னர் கூறியதாக திருத்தியமைக்கப்பட்ட செய்தியை தனது முகநூலில் வெளியிட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நாளிதழானது, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-ன் கீழ், விசாரணை செய்யப்பட்டு வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில், வேறு ஏதேனும் தரப்பினரால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டால், அது தனிப்பட்ட வழக்கு என்றும், நடைமுறைச் சட்ட விதிகளின்படி போலீசார் அதனை விசாரணை செய்வார்கள் என்றும் ஃபாமி ஃபாட்சீல் குறிப்பிட்டுள்ளார்.








