தெமர்லோ, நவம்பர்.25-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸ் துறை விதித்த தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 38 வயது ஓர் இந்திய ஆடவருக்கு பகாங், தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 30 மாதச் சிறைத் தண்டனையை விதித்தது.
குணாளன் அய்யாதுரை என்ற அந்த நபர், இரவு நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும் என்று போலீஸ் துறை நீதிமன்ற வாயிலாக தடை உத்தரவை விதித்திருந்தது.
எனினும் அந்த தடை உத்தரவை மீறியதற்காக 1959 ஆம் ஆண்டு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபருக்கு மாஜிஸ்திரேட் தி பெய் சி சிறைத் தண்டனையை விதித்தார்.
குணாளனுக்கு போலீஸ் துறை விதித்த உட்புறக் கட்டுப்பாடு உத்தரவு செல்லத்தக்கது என்றும் அது ரத்து செய்யப்படவில்லை என்றும் மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி பெந்தோங் மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குணாளன், குற்றத் தடுப்பு வாரியத்தினால் 2018 ஆம் ஆண்டு முதல் இரவு நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குணாளன் தங்கியிருந்த மெந்தக்காப்பில் பதிவுச் செய்யப்பட்ட வீட்டில் இரவு நேரத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் அவர் வீட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்நது கைது செய்யப்பட்டார்.
குணாளனுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அவர் வீட்டில் இருக்க வேண்டும். அப்படி வெளியேற வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் பகாங் மாநில போலீஸ் துறையின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
எனினும் தனக்குச் சொந்தமான கைப்பேசியைத் தனது காதலி எடுத்துச் சென்று விட்டதால் அதனை வாங்குவதற்காக இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இருந்ததாக ஒரு முன்னாள் கைதியான குணாளன் கூறிய காரணத்தை நீதிமன்றம் நிராகரித்தது.








