மலாக்கா மாநிலத்தில் இதுவரை தொடங்கப்படாத 55 மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவூஃப் யுசோ பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஜி. சிவமலர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத் தேர்தலில் மீண்டும் மக்களின் ஆதரவைக் கோருவதற்கு முன்னதாக, அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.
கடந்த 17 மாதங்களாகியும் திட்டங்களில் எத்தனை நிறைவடைந்துள்ளன, எத்தனை தாமதமாகியுள்ளன, எத்தனை இன்னும் தொடங்கப்படவில்லை என்ற விவரங்களை மக்கள் அறிய உரிமை உண்டு என அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2025ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி நிலவரப்படி, 88 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டு நிதியில் 19.52 மில்லியன் ரிங்கிட் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், இது 22.18 விழுக்காடு என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் தொடர்பான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜி. சிவமலர் கேட்டுக் கொண்டார்.








