கோலாலம்பூர், அக்டோபர்.01-
பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பிரதமர் வேட்பாளராக இன்னும் யாரையும் பாஸ் கட்சி முன்மொழியவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் உட்பட எந்த தலைவரின் பெயரையும் பிரதமர் வேட்பாளருக்கு பாஸ் கட்சி முன்மொழியவில்லை என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.
தன்னை பெர்சத்து தலைவர் என்று கூறிக் கொண்ட ஒருவர், வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பிரதமர் வேட்பாளராக லாருட் எம்.பி. ஹம்ஸா ஸைனுடீனின் பெயர் முன்மொழியப்பட்டதற்கு பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உட்பட ஐந்து முன்னணி தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஓர் ஆடியோ காணொளி தொடர்பில் கருத்துரைக்கையில் தக்கியுடின் மேற்கண்டவாறு கூறினார்
பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து பாஸ் கட்சியோ அல்லது மற்ற உறுப்புக் கட்சிகளோ இதுவரையில் விவாதிக்கவில்லை என்று தக்கியுடின் குறிப்பிட்டார்.








