கோலாலம்பூர், நவம்பர்.23-
அபாயம், மோசம், கவனம் ஆகிய நிலைகளில் தொடர் மழை எச்சரிக்கையை நவம்பர் 25, வரை பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, பகாங், சிலாங்கூர் ஆகிய 6 மாநிலங்களுக்கு வெளியிட்டுள்ளது மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா. மலாக்கா நீரிணை பகுதியில் உருவான குறைந்த அழுத்த அமைப்பு, வடக்கு தீபகற்பத்தின் கடலோரப் பகுதிக்கு அருகில் நிலை கொண்டிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
இந்த வானிலை காரணமாக தொடர் பலத்த மழை, பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் நிலைமைகள் நவம்பர் 23 முதல் 25 வரை வடக்கு, மேற்கு தீபகற்ப மாநிலங்களில் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் வானிலை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca செயலி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








