May 14, 2026
Thisaigal NewsYouTube
உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்
தற்போதைய செய்திகள்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

Share:

உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்க, நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் மனிதவள அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிடப்பட்ட ‘மலேசியப் பொருளாதாரக் கண்காணிப்பு ஏப்ரல் 2026’ எனும் அறிக்கையில், நாட்டின் வேலைவாய்ப்புச் சூழலை உற்பத்தித்திறன் சார்ந்ததாக மாற்றுவதன் அவசியத்தை உலக வங்கி வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கேற்ப எதிர்கால மனிதவளத்தை வடிவமைப்பதில் தமது அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வியான திவெட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பமான ஸ்டெம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் திறன் துறைகள் குறித்த விழிப்புணர்வு ஊட்டப்படும்.

இதன் மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதற்கு முன்பே, தங்களின் எதிர்காலப் பாதை குறித்து தெளிவான மற்றும் ஆழமான புரிதலுடன் முடிவெடுக்க முடியும் என்பதை அமைச்சர் ரமணன் சுட்டிக்காட்டினார்.

மனிதவள அமைச்சு தனது பல்வேறு முகமைகள் மற்றும் தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து, வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், அந்த வேலைகள் தொழிலாளர்களின் திறமைக்கும் உற்பத்தித்திறனுக்கும் ஏற்ற வருமானத்தை வழங்குவதை உறுதி செய்யப் பாடுபடும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

மேலும், 13-வது மலேசியத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், ‘டேலண்ட் கார்ப்’ வாயிலாக ‘மை மாஹிர்’ மற்றும் ‘எதிர்காலத் திறன் மேம்பாட்டுக் கழகம்’ போன்ற தளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு தயார்நிலை குறியீடு மற்றும் முக்கியமான வேலைவாய்ப்புகள் பட்டியல் போன்றவற்றைப் பயன்படுத்தி, தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மனிதவள மேம்பாடு திட்டமிடப்படும்.

பொருளாதார மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், முறையான சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வுடன் கூடிய உயர்தர வேலைகளை மலேசியர்களுக்குப் பெற்றுத் தருவதே ‘மலேசிய மடானி’ கோட்பாட்டிற்கு இணங்க அமைச்சின் இறுதி இலக்கு என ரமணன் தமது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News