இன்று அதிகாலையில் ஜோகூர், ஜலான் பத்து பஹாட் - மெர்சிங் சாலையின் 49.5 கிலோ மீட்டரில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒருவர் கருகி மாண்டார். மூன்று சிங்கப்பூர் பிரஜைகள் உட்பட இதர நால்வர் படுகாயம் அடைந்தனர்.
இன்று அதிகாலை 1.43 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒரு டொயோட்டா வியோஸ் காரும் , , ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ் வாகனமும் சம்பந்தப்பட்டு இருந்தன.
அந்த எம்.பி.வி வாகனம் பத்து பகாட்டிலிருந்து குளுவாங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த காரினால் மோதப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் முகமட் ஆஸ்மி ஹுசின் தெரிவித்தார்.
இந்த மோதலுக்கு பின்னர் அருகில் உள்ள மரத்தில் மோதிய அந்த கார் தீப்பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் காரில் பயணம் செய்த நபர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்தார்.
எம்.பி.வி வாகன ஓட்டுநரான 55 வயதுடைய நபர், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளானார். அதேவேளையில் சிங்கப்பூரியர்களான 50 வயதுடைய நபரும், 47 வயதுடைய மாதுவும், அவர்களின் 11 வயது மகனும் கடுமையாக காயமுற்றதாக நிக் முகமட் ஆஸ்மி ஹுசின் குறிப்பிட்டார்.








