ஷா ஆலாம், டிசம்பர்.21-
ஷா ஆலம் சமூக வனப் பகுதியில் புதிய சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, Arundina Setia Eco Park பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இன்று உணர்ச்சிப்பூர்வமான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சாலை அமைக்கப்பட்டால், அமைதியான சூழல் கெடுவதோடு, DASH எனப்படும் டாமான்சாரா - ஷா ஆலாம் விரைவுச் சாலையை இணைக்கும் முக்கியப் பாதையாக இது மாறுவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
"இயற்கையை நேசித்தே இங்கு வீடுகளை வாங்கினோம்; ஆனால் காட்டை அழித்துச் சாலை அமைப்பது எங்கள் சமூகத்தின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கும்" என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் Jeffery Heng ஆவேசமாகத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ள குடியிருப்பாளர்கள், காட்டைப் பாதுகாக்கவும் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்கவும் வலியுறுத்தி மாநகராட்சிக்கு மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.








