கோலா லங்காட், பிப்ரவரி.05-
சிலாங்கூர், கோலா லங்காட், தெலுக் பாங்லிமா காராங்கில் உள்ள செம்பனைத் தோட்டப் பகுதியில் தனியாகக் காணப்பட்ட கிடங்கு ஒன்றில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையிட்டதில் 24 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கிடங்கு சீனாவிலிருந்து வரும் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும், பேக்கேஜிங் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இங்கிருந்துதான் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதிகாரிகளின் பார்வையில் படாமல் இருப்பதற்காக, வணிகப் பெயர்ப் பலகைகள் ஏதுமின்றி, தோட்டப் பகுதியின் உட்புறத்தில் இந்தத் தொழில் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 10.55 மணியளவில் நடைபெற்ற இந்தச் சோதனையில் சீனப் பிரஜைகளான இரண்டு ஆடவர்கள், 9 வங்காளதேசிகள், 2 இந்தியப் பிரஜைகள், 2 மியன்மார் பிரஜைகள், ஒரு கம்போடியா பிரஜை மற்றம் 8 பெண்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.








