கோலாலம்பூர், அக்டோபர்.26-
47வது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை சில ரெப்பிட் கேஎல் தொடர்வண்டி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. கிளானா ஜெயா, புத்ராஜெயா, காஜாங் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் உள்ள அம்பாங் பார்க், கொன்லேய், பெர்சியாரான் கேஎல்சிசி, புக்கிட் பிந்தாங் உள்ளிட்ட நிலையங்கள் மூடப்பட்டன என்று ரெப்பிட் ரெயில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், பயணிகள் அருகிலுள்ள மோனோரெல் நிலையங்களையோ அல்லது கிளானா ஜெயா வழித்தடத்தில் இருக்கும் கம்போங் பாரு நிலையத்தையோ பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. மற்ற தொடர்வண்டி நிலையங்களின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரெப்பிட் கேஎல் உறுதிப்படுத்தியுள்ளதுடன், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட, அதன் சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது PULSE செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








