ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-
பினாங்கு படகுச் சேவைகளில் ஈடுபட்டுள்ள படகுகளில், குறிப்பாக பூலாவ் டூயுங் படகில், மொத்தம் 3 உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் மட்டுமே உள்ளதாக எழுந்துள்ள புகார்களைப் பினாங்கு துறைமுக ஆணையமான பிபிசி மறுத்துள்ளது.
பினாங்கு துறைமுகத்தால் நிர்வகிக்கப்படும் அப்படகுகள் குறித்து, சிலர் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இது போன்ற பொய்யான செய்திகளால், பொதுமக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் பிபிசி வருத்தம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், ஒவ்வொரு படகிலும் 263 உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் சிறப்பு அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர நேரத்தில் படகு சிப்பந்திகள் அதனை எடுத்து பயணிகளுக்கு விநியோகம் செய்வார்கள் என்றும் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
பினாங்கு படகுச் சேவைகளில் உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் குறைவாக உள்ளதாக அண்மையில், சமூக ஊடகங்களில் பரவிய செய்தியைத் தொடர்ந்து பிபிசி இவ்வாறு விளக்கமளித்துள்ளது.








