பட்டர்வெர்த், அக்டோபர்.05-
மக்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த, பட்டர்வெர்த் டிஜிட்டல் நூலகத்தில் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியின் ஊழல் எதிர்ப்புத் திட்டக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. நிர்வாகத்திலும் அன்றாட வாழ்விலும் நேர்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதன் மூலமும், ஊழலின் ஆபத்துகள் குறித்துப் பொதுமக்களின் புரிதலை அதிகரிப்பதன் மூலமும், அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்றடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, மானியங்கள் முறையாகச் சென்றடைய இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் என்று நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்தில், பள்ளி மாணவர்களிடையேயும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிரிஷ்ணன் வலியுறுத்தினார்.

எந்த நிறுவனத்திலும் ஊழல் இருந்தாலும், அதை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி என்று செபராங் பிறை நகராண்மைக்கழக உறுப்பினர் லிங்கேஸ்வரன் சார்மார் தனது உரையில் கூறினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் ஊழல் குறித்த உண்மை விவரங்களையும், மக்கள் துணிச்சலாகப் புகார் அளிப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கியது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.








