அரச போலீஸ் படையின் மரபணு ஆய்வகத்தை மேம்படுத்த 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் 11.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், இதுவரை 420 மரபணு பொருத்த வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக அரச போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதில் கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சட்ட அமலாக்கத்துக்கான 7-வது தேசிய தடயவியல் அறிவியல் கருத்தரங்கம் 2026 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் காலிட் இஸ்மாயில், தடயவியல் விசாரணைகளை விரைவுபடுத்த போலீசாருக்கு கூடுதல் தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தலைமை இயக்குநர் டத்தோ மியோர் இஸ்மாயில் மியோர் அகிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை போலீசாரின் மரபணு ஆய்வகத்தில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 85 மாதிரிகள் நிலுவையில் இருப்பதாகவும், இதனை சமாளிக்க ஆய்வாளர்களுக்கான கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காலிட் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடயவியல் விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவை வெறும் உதவிக் கருவியாக பார்க்காமல், ஒரு முக்கிய உத்தியாக போலீசார் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் செயற்கை நுண்ணறிவு மூலம் தரவுகளை விரைவாக ஆய்வு செய்து, குற்றங்கள், நபர்கள் மற்றும் சம்பவ இடங்களுக்கு இடையிலான தொடர்புகளை துல்லியமாக கண்டறிய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








