மின்சாரக் கட்டண உயர்வால் குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது குறித்து விவாதிக்க, நிதி அமைச்சில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்தில் நிறைவடைந்தது.
துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யுசோஃப் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஃபாடில்லா யுசோஃப், கருத்து தெரிவிக்க மறுத்ததுடன், இது தொடர்பான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இக்கூட்டத்தில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் மற்றும் எரிசக்தி ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மாதத்திற்கு 600 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 80 சதவீத வீட்டு பயனர்கள், அதிகரித்த எரிபொருள் செலவால் ஏற்படும் கட்டண உயர்விலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக நேற்று அன்வார் தெரிவித்திருந்தார்.
எனினும், சமீபத்திய வெப்பமான வானிலை மற்றும் புகைமூட்டம் காரணமாக சில குடும்பங்களின் மின்சாரப் பயன்பாடு 600 கிலோவாட்டைத் தாண்டியதால், அவர்கள் தானியங்கி எரிபொருள் செலவு சரிசெய்தல் முறையின் கீழ் கூடுதல் கட்டணத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








