கடந்த மார்ச் மாதம் முதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதித்து வரும் மத்திய கிழக்கு மோதலின் தாக்கம், தற்போது மலேசியாவின் பிற எரிசக்தித் துறைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக இயற்கை எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி மூலப்பொருட்களின் விலைகளிலும் இந்த தாக்கம் காணப்படுவதாக பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசீர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மாதத்திற்கு 600 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சீர்குலைவின் தாக்கத்தை தற்போது எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக இந்த பாதிப்பு பெட்ரோல் சந்தையில் அதிகமாகத் தெரிந்த நிலையில், தற்போது இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகளுக்கும் பரவியுள்ளதாக அக்மால் நஸ்ருல்லா ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய மின் கட்டண முறையின்படி, மாதத்திற்கு 600 கிலோவாட் மணி நேரத்துக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் பெரும்பாலான நுகர்வோருக்கு எரிபொருள் செலவு அல்லது விநியோக விலை மாற்றங்களால் நேரடி பாதிப்பு இருக்காது என அக்மால் நஸ்ருல்லா தெரிவித்தார்.
600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோரிடமே இதன் தாக்கம் தெளிவாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே உலகளாவிய எரிசக்தி விநியோகச் செலவுகளை சமாளிக்க மாற்று வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தற்போதைய கட்டண முறை உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டு தேவையான மாற்று நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அக்மால் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்டில் நிலவும் புகைமூட்டம் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்படுவதால், மின்சாரப் பயன்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதையும் அக்மால் நஸ்ருல்லா சுட்டிக் காட்டியுள்ளார்.








