சபா மாநிலத்தின் தோங்கோட் மாவட்டத்தில் அழிந்துவரும் போர்னியன் யானைகளைப் பாதுகாக்கவும், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பாக இணைந்து வாழ்வதற்கான வழிகளை உருவாக்கவும் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.
பெனாங்கா திறந்தவெளி அரங்கில் கடந்த செப்டம்பர் 11 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற உலக யானைகள் தின நிகழ்ச்சியில் பொதுமக்கள், பாதுகாப்பு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏர்த்வேர்ம் அறக்கட்டளை திட்டத் தலைவர் ஜுஹானா ஜோனி கூறுகையில், யானைகள் பாதுகாப்பு என்பது பாதுகாப்பு அமைப்புகளால் மட்டும் மேற்கொள்ள முடியாதது என்றும், உள்ளூர் சமூகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.
மேலும் மனிதர்கள் – யானைகள் மோதலைத் தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குவாமுட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ மாசியுங் பானா, நீண்டகால பாதுகாப்புக்கு அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் தேவை எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் யானைகள் பாதுகாப்பு கண்காட்சி, ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டும் போட்டிகள், கால்பந்து மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.








