நாடெங்கிலும் இன்று புதிய தலைமுறை மைகாட் வழங்கும் பணிகள் சுமூகமாக தொடங்கியுள்ள நிலையில், மலேசியர்கள் மத்தியில் அதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தேசியப் பதிவுத் துறையின் அடையாள அட்டை பிரிவு இயக்குநர் முஹமட் அஸ்ராஃப் சுகாடி தெரிவித்துள்ளார்.
Putrajaya தேசியப் பதிவுத் துறை அலுவலகத்தில் வழக்கமான நாளில் சுமார் 100 பேர் மட்டுமே மைகாட் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் நிலையில், இன்று காலை மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புதிய மைகாட் பெறுவதற்கான நடைமுறையில் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் அஸ்ராஃப் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் புத்ராஜெயா அலுவலகத்தில் சிக்கல்கள் இல்லாத பட்சத்தில் இந்த புதிய மைகாட் சுமார் 30 நிமிடங்களில் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் ,12 வயது சிறார்களுக்கு சராசரியாக ஒரு மணி நேரம் ஆகும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்த புதிய மைகாட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை சாதாரண செல்போன் கேமரா மூலம் படிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்க அதிகாரிகளால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் அது, பிரத்யேகப் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இதனைப் பெற பொதுமக்கள் அவசரப்படத் தேவையில்லை என்றும், தற்போதுள்ள மைகாட் தொடர்ந்து பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதையும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று முதல், அச்சிடும் வசதி கொண்ட 40 தேசியப் பதிவுத் துறை கிளைகளில் விண்ணப்பிக்கும் மலேசியர்களுக்கு, அதே நாளில் இந்த புதிய மைகாட் வழங்கப்படுகின்றது.
அச்சிடும் வசதி இல்லாத கிளைகளில் விண்ணப்பிப்பவர்களுக்கு, 5 வேலை நாட்களுக்குள் அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








