கோலாலம்பூர், நவம்பர்.05-
தனது குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற ரிடுவான் அப்துல்லா, இன்னமும் மலேசியாவில்தான் சுதந்திரமாக நடமாடி வருவதாகக் கூறப்படும் கூற்று குறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டச் சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
தனது முன்னாள் கணவர் கே. பத்மநாபன், இன்னமும் மலேசியாவில்தான் உள்ளார் என்று இந்திராகாந்தி கூறியுள்ள கூற்று, எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து போலீசார் ஆராய வேண்டும். காரணம், இந்திராகாந்தியின் குழந்தையைத் தன்வசம் வைத்துள்ள பத்மநாபனைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் பிறப்பித்த ஆணை, கடந்த பத்து ஆண்டு காலமாக கிடப்பில் உள்ளது என்று குலசேகரன் சுட்டிக் காட்டினார்.
இந்திராகாந்தியின் கணவர் பத்மநாபன் , அரசாங்கம் வழங்கியுள்ள 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை மற்றும் பெட்ரோலுக்கான பூடி95 அனுகூலங்களை அனுபவித்து வருவதாக அந்த முன்னாள் ஆசிரியை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திராகாந்தியின் முன்னாள் வழக்கறிஞரான குலசேகரன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.








