சுங்கை பட்டாணி, ஜூலை.19-
கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் படிவம் ஒன்றில் பயின்று வரும் ஓர் இந்திய மாணவியைப் பள்ளியின் கழிப்பறையில் வாய், கை, கால் கட்டப்பட்டு, பகடி வதை செய்யப்பட்ட சம்பவம், அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 வயது இந்திய மாணவிக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவருடன் படிவம் ஒன்றில் பயிலும் இரண்டு இந்திய மாணவிகள் விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
கடந்த ஜுலை 14 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் பள்ளி முடிந்து, அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வதற்கு அவரின் தாயார், இடைநிலைப் பள்ளியின் வெளி வளாகத்தில் காத்திருந்துள்ளார்.
பள்ளி முடிந்து, வெகு நேரமாகியும், தனது மகள், பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறாததைக் கண்டு சந்தேகித்த அந்த மாது, அந்த இடைநிலைப் பள்ளி பாதுகாவலரின் அனுமதியுடன் பள்ளி வளாகத்திற்குள் சென்று தனது மகளைத் தேடி இருக்கிறார்.
பள்ளி ஆசிரியரும் அவருக்கு உதவி செய்துள்ளார். பள்ளியில் எல்லா வகுப்பறைகளிலும் தேடியப் பின்னர் கடைசியில் பள்ளியின் பெண்கள் கழிப்பறைக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட மாணவி வாய் , கை மற்றும் கால்கள் துணியால் கட்டப்பட்டு சோர்வுடன் கழிப்பறைத் தரையில் கிடந்ததைக் கண்டு மாணவியின் தாயாரும் உடன் இருந்த ஆசிரியரும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
அந்த மாணவி கிட்டத்தட்ட 45 நிமிடம் பள்ளி கழிப்பறையிலேயே இருளில் கிடந்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் என்று ஏசிபி ஹன்யான் ரம்லான் குறிப்பிட்டார்.
அந்த மாணவி, இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அப்பள்ளியில் படிவம் ஒன்றில் பயிலும் 13 வயதுடைய இரு இந்திய மாணவிகள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டம் 323 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.








